< Back
தேசிய செய்திகள்
உணவு விடுதியில் சாப்பிட்ட பின் ரத்த வாந்தி எடுத்த 5 பேர்; விசாரணையில் திடுக் தகவல்
தேசிய செய்திகள்

உணவு விடுதியில் சாப்பிட்ட பின் ரத்த வாந்தி எடுத்த 5 பேர்; விசாரணையில் திடுக் தகவல்

தினத்தந்தி
|
5 March 2024 6:32 PM IST

உணவு விடுதியில் 3 மாதங்களுக்கு முன் மேலாளராக சேர்ந்த 30 வயதுடைய ககன்தீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குருகிராம்,

அரியானாவின் குருகிராம் நகரில் செக்டார் 90 பகுதியில், லபோரெஸ்டா என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 3-ந்தேதி இரவில் சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள் இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர், வாயை கொப்பளிப்பதற்கு மவுத் பிரெஷ்னர் எனப்படும் திரவம் வழங்கப்பட்டு உள்ளது.

அதனை வாங்கி பயன்படுத்தியதும், வாய் பகுதியில் எரிய கூடிய உணர்வு ஏற்பட்டு உள்ளது. இதன்பின்பு, வாந்தி எடுக்க தொடங்கினர். இதில், 5 பேர் ரத்த வாந்தி எடுத்து உள்ளனர். அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 5 பேரில் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த அங்கித் குமார் அளித்த புகாரின்பேரில், டெல்லியின் கீர்த்தி நகரை சேர்ந்த ககன்தீப் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 3 மாதங்களுக்கு முன் அந்த உணவு விடுதியில் மேலாளராக சேர்ந்துள்ளார்.

அவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில், மவுத் பிரெஷ்னர் மற்றும் உலர் பனிக்கட்டிகள் தவறுதாக ஒன்றாக கலக்கப்பட்டு விட்டன. பணியாளர் ஒருவரின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும், வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை என்றும் துரதிர்ஷ்டவசத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டது என்றும் மேலாளர் கூறியுள்ளார்.

இதுபற்றி மனேசர் நகர காவல் துறை உயரதிகாரியான சுரேந்தர் ஷியோரன் கூறும்போது, உணவு விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கூறப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்