தனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரா் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
|தனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கே.வி.ஜி. மருத்துவ கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இதில், பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக ராமகிருஷ்ணா இருந்து வந்தார். தனது சகோதரர் சிதானந்தாவின் மருத்துவ கல்லூரியையும் ராமகிருஷ்ணா கவனித்து வந்துள்ளார். இந்த கல்லூரிகளை நிர்வகிப்பது மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக ராமகிருஷ்ணா மற்றும் அவரது மற்றொரு சகோதரர் ரேணுகா பிரசாத் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சுள்ளியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து ராமகிருஷ்ணா கொலை செய்யப்பட்டார். அவரை ரேணுகா பிரசாத் தான் கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டியதும், சொத்து பிரச்சினையில் கொலை நடந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக ரேணுகா பிரசாத், மனோஜ் ராய், எச்.ஆர்.நாகேஷ், வாமன பூஜாரி, சங்கர் ஆகிய 5 பேரை சுள்ளியா போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை புத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரேணுகா பிரசாத் உள்பட 5 பேர் மீதும் சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை விடுதலை செய்து புத்தூர் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் புத்தூர் போலீஸ் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
அப்போது பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரான ராமகிருஷ்ணாவை, சொத்து விவகாரத்தில் அவரது சகோதரர் ரேணுகா பிரசாத் கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டி இருப்பது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. எனவே புத்தூர் கோர்ட்டு 5 பேரையும் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரேணுகா பிரசாத் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் ராமகிருஷ்ணா மனைவிக்கு ரூ.10 லட்சம் வழங்கவும், ரேணுகா பிரசாத் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவருக்கு சிறையிலேயே உரிய சிகிச்சை வசதிகளை செய்து கொடுக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.