< Back
தேசிய செய்திகள்
குடகில்  போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது
தேசிய செய்திகள்

குடகில் போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

குடகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

குடகு-

குடகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா கொப்பா மற்றும் பைலகொப்பாவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பைலகொப்பா திபெத்திய முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீசார் சம்பந்தப்பட்ட காரின் பதிவு எண்ணை கொண்டு 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்தது. இந்த குற்றச்செயல்களுக்கு முக்கிய காரணமாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பயன்படுத்தும் நபர்கள்தான் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி நேற்று குடகு பைலகொப்பா பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த விக்ரம் (வயது 25), குஷால்நகரை சேர்ந்த நயன்தீப் (28), கொப்பா கிராமத்தை சேர்ந்த பரத்குமார் (30), பொய்கேரியை சேர்ந்த ஜம்ஷீர் (26), பிரியபட்டணாவை சேர்ந்த அனில் குமார் (24) என்று தெரியவந்தது. இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, குடகில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 5 பேர் மீதும் குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்