< Back
தேசிய செய்திகள்
கஞ்சா செடிகளை வளர்த்து விற்ற 5 மருத்துவ மாணவர்கள் கைது
தேசிய செய்திகள்

கஞ்சா செடிகளை வளர்த்து விற்ற 5 மருத்துவ மாணவர்கள் கைது

தினத்தந்தி
|
25 Jun 2023 6:45 PM GMT

சிவமொக்காவில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்ற 5 மருத்துவ கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

சிவமொக்கா:-

கஞ்சா செடிகள் வளர்ப்பு

சிவமொக்கா மாவட்டத்தில் வீடுகளில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று சிவமொக்கா டவுன் ஹலே குருபுரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 2 பேர் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் விஜயாபுரா மாவட்டம் கீர்த்தி நகரை சேர்ந்த அப்துல் கயூம் (வயது 25), விஜயநகர் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த அர்பிதா (24) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 466 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 3 பேர் கைது

இதேபோல சிவமொக்கா புறநகர் பகுதியில் உள்ள சிவகங்கை லே அவுட்டில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் தனி கூடாரம் அமைத்து நவீன முறையில் கஞ்சா செடிைய வளர்த்து வந்தது தெரியவந்தது. இதற்காக பல்பு மற்றும் பல எலெக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜக்கப்பா நகரை சேர்ந்த விக்னராஜ் (வயது 28), தர்மபுரி மாவட்டம் கடகத்தூரை சேர்ந்த பாண்டிதுரை, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி நகரை சேர்ந்த வினோத்குமார் (27) என்று தெரியவந்தது. இவர்கள் இணையதளத்தில் கஞ்சா செடியை எப்படி? வளர்ப்பது என்பதை பார்த்து, அதன்படி கஞ்சா செடியை வளர்த்து வந்ததுடன், அவற்றை பறித்து காயவைத்து விற்பனையும் செய்து வந்துள்ளனர்.

1½ கிலோ கஞ்சா பறிமுதல்

மேலும் அவர்களிடம் ரூ.5,800 மதிப்பிலான 227 கிராம் உலர்ந்த கஞ்சா, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 1½ கிலோ கஞ்சா, 10 கிராம் சரஸ், கஞ்சா விதை, கஞ்சா எண்ணெய், கஞ்சா பொடி, எலெக்ட்ரானிக் பொருட்கள், எல்.இ.டி. பல்புகள், ரூ.19 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர். விசாரணையில் கைதான 5 பேரும் சிவமொக்கா புறநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கியிருந்து படித்து வந்ததும், பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில் அவர்கள் கஞ்சா செடிகளை வளர்த்து, அவற்றை விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பு

கைதான 5 பேர் மீது சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்