< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.1¼ கோடிக்கு ஏலம்
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.1¼ கோடிக்கு ஏலம்

தினத்தந்தி
|
28 Sep 2023 7:10 PM GMT

தெலுங்கானாவில் விநாயகருக்கு படைக்கப்பட்டு லட்டு ஒன்று ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில் லட்டு ஏலம் விடப்படுவதும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த லட்டுவை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் லட்டுவை வாங்குவதில் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.

ரூ.1¼ கோடிக்கு ஏலம் போன லட்டு

இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது.

அந்த லட்டு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் ஐதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள பிரபலமான லட்டுவை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.

மேலும் செய்திகள்