ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதியில் 20-ந்தேதி 5 மணி நேரம் தரிசனம் ரத்து
|திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு 20-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ம்தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 4 முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு 20-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோவில் சுவர்களில் தெளிக்கப்படும்.
இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தினம் அஷ்ட தல பாதமாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.