மத்திய பிரதேசம்: திருமணத்திற்கு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 36 பேர் காயம்
|மத்தியப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஷாதோல்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பியோஹரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் சுதிர் சோனி கூறியதாவது:-
நேற்று இரவு 9.30 மணியளவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி ஒன்று டிகாஹி கிராமத்தில் உள்ள ஒரு தாபா அருகே திருப்பத்தில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 15 வயது சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். வாகனத்தின் டிரைவர் மற்றும் மணமகன் பாதுகாப்பாக உள்ளனர்.
படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.