சித்தூர்: ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது - ரொக்கம், செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டுகள் பறிமுதல்
|சித்தூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம், ஏ.டி.எம். கார்டுகள், உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டத்தில் சிலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக போலீஸ் நிலையங்களுக்கு ஏராளமானப் புகார்கள் வந்தன. அதன்பேரில் மோசடி நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் சித்தூர் மெசானிக் மைதானம் அருகே உள்ள வனப்பகுதி சாலையில் சந்தேகப்படும் படியாக 5 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்த சித்தூர் 1-டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மராஜு மற்றும் போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, 5 பேரும் பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (வயது 23) மற்றும் கர்நாடக மாநிலம் கொடுகு மாவட்டம் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (30), கிரண் (35), மற்றொரு கிரண் (32), ஜெயினுல்ஹபீத் (33) என்று தெரிய வந்தது.
5 பேரும் கூட்டாகச் சேர்ந்து பல்வேறு செல்போன் எண்களை சேகரித்து, அந்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி, உங்களுக்கு 'கிப்ட் வவுச்சர்' வந்துள்ளது, அதற்காக நீங்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலுத்த வேண்டும், அவ்வாறு செலுத்தினால் உங்களுக்கு கார் அல்லது மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், என ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்கள் மோசடியில் ஈடுபடும்போது நீங்கள் எங்களுக்கு நேரடியாக பணம் செலுத்த தேவையில்லை. வங்கி கணக்கு எண்ணை அனுப்புகிறோம், அந்த எண்ணுக்கு நீங்கள் பணம் அனுப்பி வைத்தால் உங்களுக்கு 2 நாட்களுக்குள் 'கிப்ட் வவுச்சர்' வரும். அந்த கிப்ட் வவுச்சரை அருகில் உள்ள ஷோரூம்களில் வழங்கி பெற்றுக்கொள்ளலாம், எனக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சித்தூர் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மொத்தம் 25-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகி உள்ளன.
இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 30 ஏ.டி.எம். கார்டுகள், 2 மடிக்கணினிகள், ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரும் யார் யாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பாக செயல்பட்டு மோசடி நபர்களை பிடித்த போலீசாருக்கு சூப்பிரண்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். அப்போது நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ரெட்டி, சித்தூர் 2-டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மராஜு, பெனுமூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.