ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தாமதத்துக்கான அபராதம் சீரமைப்பு; சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
|ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தாமதத்துக்கு விதிக்கும் அபராதத்தை சீரமைத்து சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கவுன்சிலின் 49-வது கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூட்ட முடிவுகள் குறித்து நிருபர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பான் மசாலா மற்றும் குட்கா தொழில் துறையில் வரி ஏய்ப்பை தடுப்பது குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் (ஜி.எஸ்.டி.ஏ.டி) அமைப்பது குறித்தும், மந்திரிகள் குழு அளித்த அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கல்
மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.19 ஆயிரத்து 982 கோடி உள்பட அனைத்து ஜி.எஸ்.டி. இழப்பீடுகளும் விரைவில் வழங்கப்பட்டு விடும். இந்தத் தொகையை மத்திய அரசு தனது சொந்த ஆதாரங்களில் இருந்து வழங்கும். எதிர்கால செஸ் வரியில் இருந்து திரும்ப பெறப்படும்.
அபராதம் சீரமைப்பு
ஜி.எஸ்.டி வருடாந்திர கணக்கு தாக்கல் தாமதத்துக்கு விதிக்கப்படுகிற அபராதத்தை முறைப்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. ஒரு நிதி ஆண்டில் ரூ.5 கோடி வரை மொத்த விற்றுமுதல் (டேர்ன் ஓவர்) கொண்ட பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு, அதிகபட்ச விற்றுமுதல் 0.04 சதவீதத்திற்கு உட்பட்டு, தாமத கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.50 ஆக இருக்கும். ரூ.5 கோடிக்கு மேல் ரூ.20 கோடி வரை இருந்தால், வருவாயில் 0.04 சதவீதத்துக்கு உட்பட்டு, ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
தற்போது, ஜி.எஸ்.டி.ஆர்-9 படிவத்தில் வருடாந்திர வருமான கணக்கைத் தாமதமாகத் தாக்கல் செய்தால், விற்றுமுதலில் அதிகபட்சமாக 0.5 சதவீதத்திற்கு உட்பட்டு, ஒரு நாளுக்கு ரூ.200 தாமத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பென்சில் 'ஷார்ப்னர்' வரிகுறைப்பு
சில்லறையாக விற்கப்படுகிற வெல்லப்பாகுக்கு 18 சதவீத வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதுவே பாக்கெட்டில் வைத்து லேபிள் ஒட்டி விற்கப்பட்டால் அதற்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். பென்சில் 'ஷார்ப்னர்'கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.