< Back
தேசிய செய்திகள்
48,600 பலாத்கார வழக்குகள்... அவர் ஒரு பொய்யர்; மம்தா பானர்ஜியை சாடிய மத்திய அரசு
தேசிய செய்திகள்

48,600 பலாத்கார வழக்குகள்... அவர் ஒரு பொய்யர்; மம்தா பானர்ஜியை சாடிய மத்திய அரசு

தினத்தந்தி
|
31 Aug 2024 10:38 AM IST

பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் உண்மையில் சரியல்ல என மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற கொடூர குற்றங்களில் கடுமையான சட்டம் மற்றும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க கூடிய தண்டனை வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

அவர் எழுதிய 2-வது கடிதத்தில், வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து வைக்க, கட்டாயம் ஒரு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில், அவருடைய இந்த கடிதத்திற்கு பதிலளித்து உள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி அன்னபூர்ணா தேவி, மம்தா கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க கூடிய விசயங்கள் உண்மையில் சரியல்ல என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதங்களை மறைக்கும் வகையில் பானர்ஜி செயல்பட்டு உள்ளார் என கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாநிலத்தில் 88 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால், நான் முன்பே கடந்த 25-ந்தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல், இவை மத்திய அரசு திட்டத்திற்கு உட்பட்ட விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அல்ல.

மேற்கு வங்காளத்தில் 48,600 பாலியல் பலாத்கார மற்றும் போக்சோ வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள சூழலில், கூடுதலாக 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளன. அவை மேற்கு வங்காளத்திற்கு தேவையாக உள்ளன.

அந்த வகையில், உங்களுடைய கடிதம் முற்றிலும் சரியல்ல. தவிரவும், பாலியல் பலாத்கார மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் இந்த விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதங்களை மூடி மறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே தோன்றுகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்