பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரசார் சார்பில் 48 மணிநேர தர்ணா போராட்டம்
|பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரசார் சார்பில் 48 மணிநேர தர்ணா போராட்டம் நடந்துள்ளது.
கொல்கத்தா,
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2002, பிப்ரவரி 28-ந்தேதி தோகத் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தில் வசித்த இஸ்லாமிய மதத்தவரான பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் கிராமத்தில் இருந்து வெளியேறி வேறு பகுதிக்கு சென்றார்.
21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தது. 2002, மார்ச் 3-ந்தேதி பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஷபர்வாட் என்ற கிராமத்தை அடைந்தபோது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக்கொன்ற அந்த கும்பல் கர்ப்பிணியான பில்கிஸ், அவரது தாயார், மேலும் 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 17 பேரில் பில்கிஸ் பானுவும், ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு சில வாரங்களுக்கு முன் பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தினர்.
இந்நிலையில், பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரசார் சார்பில் 48 மணிநேர தர்ணா போராட்டம் இன்று நடந்துள்ளது. இந்த போராட்டத்தில், அக்கட்சியின் எம்.பி.க்கள், மேற்கு வங்காள அமைச்சரவையில் இடம் பெற்ற மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபற்றி மேற்கு வங்காள வர்த்தக மந்திரி சசி பாஞ்சா கூறும்போது, ஆகஸ்டு 15 போன்ற முக்கியம் வாய்ந்த நாளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கு மாலை அணிவித்து, கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இது வெட்கக்கேடானது என கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து ஒருவர் கூட இந்த விடுதலை பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. ஒரு பெண் தலைவர் கூட, பிரதமரோ அல்லது உள்துறை மந்திரியோ கூட இதுபற்றி பேசவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மந்திரி சபையில் இடம்பெற்ற மூத்த மந்திரியான சந்திரிமா பாட்டர்ஜி கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி பேசிய மம்தா பானர்ஜி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பா.ஜ.க. பேசிவிட்டு, அதன் அரசு பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடையவர்களை விடுவித்து இருக்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாங்கள் 48 மணிநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார். அதன்படி, இன்றைய போராட்டத்தில் அக்கட்சியின் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.