< Back
தேசிய செய்திகள்
குஜராத் தேர்தலில் போட்டியிடும் 456 கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதல் இடத்தில் பா.ஜ.க. வேட்பாளர்
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 456 கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதல் இடத்தில் பா.ஜ.க. வேட்பாளர்

தினத்தந்தி
|
29 Nov 2022 2:51 PM IST

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 456 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர்,

மொத்தம் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு வரும் டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது.

இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 456 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக கோடீஸ்வர வேட்பாளர்களைக் கொண்ட கட்சியாக முதலிடத்தில் பா.ஜ.க. உள்ளது.

அதன்படி பா.ஜ.க.வில் 154 பேர், காங்கிரஸ் கட்சியில் 142 பேர், ஆம் ஆத்மியில் 68 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. சராசரியாக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 2.56 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களில் மான்சா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயந்தி பட்டேலுக்கு அதிகபட்சமாக 661 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், சித்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பல்வந்த் ராஜ்புத்திற்கு 372 கோடி ரூபாய் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து 3-வது இடத்தில் 342 கோடி சொத்து மதிப்புடன் தபோய் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்சிங் தாக்கூர் உள்ளார். அதே சமயம் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 6 பேர் தங்களிடம் எவ்வித சொத்தும் இல்லை என்றும், 6 பேர் தங்களிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சொத்து உள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்