< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் - வனத்துறை விசாரணை
தேசிய செய்திகள்

ஆந்திராவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் - வனத்துறை விசாரணை

தினத்தந்தி
|
26 Oct 2022 1:00 PM IST

ஆந்திராவில் வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாகுளம்,

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழந்து கிடந்தன. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே இறந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிலகம் கிராமத்தில் குரங்குகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்றிருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசிச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன், தெரிவித்தார். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்