< Back
தேசிய செய்திகள்
ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்  ஷிண்டே அரசு நடவடிக்கை
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் ஷிண்டே அரசு நடவடிக்கை

தினத்தந்தி
|
30 Sept 2022 11:43 PM IST

மராட்டியத்தில் மும்பை மாநகராட்சி உள்பட முக்கிய தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஷிண்டே அரசு பணியிடமாற்றம் செய்து உள்ளது.

மும்பை,

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர் கொடி தூக்கி, ஆதரவு எம்.எல்.ஏ., பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் மாதம் முதல்-மந்திரி ஆனார். மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மும்பை மாநகராட்சியில் பல அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த அதிகாரிகள் ஆதித்ய தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் நம்பிக்கை பெற்றவர்கள் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உள்ளது. இதில் கொரோனா பரவலின் போது மாநில சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த டாக்டர் பிரதீப் வியாஸ், பழங்குடியின மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாநில மின்நிறுவன (மகாஜென்கோ) நிர்வாக இயக்குனர் சஞ்சய் கண்டாரே நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஆதித்ய தாக்கரே மந்திரியாக இருந்த போது சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக இருந்த வல்சா நாயர் வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் தானே மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தானே மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர், நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா மாநில தொழில் மேம்பாட்டு கழக தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தொழில் மேம்பாட்டு கழக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் மாநில மின் நிறுவன சேர்மன், நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மற்றொரு தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசாமி மும்பை தேசிய சுகாதார பணி இயக்குனர் பொறுப்பில் இருந்து நவிமும்பையில் உள்ள திறன் மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை மாநகராட்சி உள்பட வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களை கருத்தில் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்