< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் 2 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: அரசு தகவல்
தேசிய செய்திகள்

குஜராத்தில் 2 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: அரசு தகவல்

தினத்தந்தி
|
11 March 2023 9:00 PM IST

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.



ஆமதாபாத்,


குஜராத் சட்டசபையில் மாண்ட்வி தொகுதி எம்.எல்.ஏ. அனிருத் தவே பேசும்போது, இந்திய கடல் பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் எவ்வளவு? என கேள்வி எழுப்பினார்.

இதேபோன்று, மதுபானம், பீர், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பற்றியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு குஜராத் அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டது.

அதில், கடந்த 2 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் ரூ.197.45 கோடி மதிப்பிலான 1.66 கோடி பாட்டில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு உள்ளன.

2 ஆண்டுகளில் 184.99 கிலோ எடை கொண்ட ரூ.924.97 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 7 இந்தியர்கள், 32 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குஜராத் உள்துறை எடுத்த நடவடிக்கையால், ரூ.3.94 கோடி மதிப்பிலான நாட்டு சாராயம், ரூ.10.47 கோடி மதிப்பிலான பீர் என 23.11 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கஞ்சா, ஹெராயின் பவுடர் என ரூ.4,058.01 கோடி மதிப்பிலான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 2 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் ஒட்டு மொத்தத்தில் ரூ.4,269.89 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சாராயம், நாட்டு சாராயம் மற்றும் பிற போதை பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவற்றுடன் தொடர்புடைய வழக்குகளில் 3 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2,987 பேர் சிக்காமல் தப்பியோடி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 ஆண்டுகளில் அதானி முந்திரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் பற்றிய பொடாட் தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் மக்வானாவின் கேள்விக்கு அரசு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ரூ.375.5 கோடி மதிப்பிலான 75 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்