வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது
|சுள்ளியா அருகே, வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரு;
ரகசிய தகவல்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அஜ்ஜவரா கிராமம் அருகே முண்டோலிமூல் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக மர்மநபா்கள் சட்டவிரோதமாக சந்தனம், செம்மரம், பலா போன்ற பல்வேறு வகையான மரங்களை வெட்டி கடத்தி வருவதும், அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் இருந்து மா்மநபா்கள் மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைந்தது. அந்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த சரக்கு லாரி ஒன்றை அதிகாரிகள் நிறுத்தினர். வனத்துறை அதிகாரிகளை கண்டதும் லாரியில் வந்த 3 பேர் கீழே குதித்து ஓடினர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் துரத்தி சென்று பிடித்தனர்.
மரங்கள் கடத்தல்
பின்னர் அந்த லாரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் முகமது ஷபிக், சுந்தர் அட்கர் மற்றும் பைசல் அட்கர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தியதும் தெரியவந்தது.
இவா்கள் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு உதவியதாக அப்துல் மஜீத் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மரக்கட்டைகளையும், லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.