ஜார்கண்டில் உள்ள பள்ளியில் வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்து விபத்து - 4 மாணவர்கள் காயம்
|ஜார்கண்டில் உள்ள பள்ளியில் வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
லதேஹர்,
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் வகுப்பறையின் கூரை பெயர்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் காயமடைந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள போக்ரிகாலாவில் உள்ள சரைதி உருது நடுநிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உருது வழிப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
வகுப்பறையில் 50 மாணவர்கள் இருந்தபோது, வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் படுகாயமடைந்த ஒரு மாணவர் மேதினிநகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று மாணவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எம்.டி.அஜம்கான் கூறும்போது, "பள்ளியில் மொத்தம் 721 குழந்தைகள் படிக்கும் நிலையில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அந்த நான்கு அறைகளின் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது" என்று கூறினார்.