பான் கார்டு அப்டேட் என்று கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது..!
|குஜராத்தில் பான் கார்டு அப்டேட் என்று கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 4 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். ரோகித் குஸ்தே என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ரோகித் குஸ்தே கூறும்போது, கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள் இணைப்பு (Link) ஒன்றை அனுப்பி, அதை கிளிக் செய்து பான் கார்டு அப்டேட்டுக்காக விவரங்களை பதிவேற்றும்படி கூறியுள்ளனர்.
குஸ்தேவின் மனைவி அந்த இணைப்பை கிளிக் செய்ததும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.40 லட்சம் பணம் காணாமல் போனதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். விசாரணையில் சூரத்தில் செல்போன் கடை வைத்துள்ள ஆஷிஷ் போதாரா, ஜெமிஷ் விரானி இருவரும் சிக்கினர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்களது கூட்டாளிகளான விபுல் போக்ரா, பிரதீப் ரங்கன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 153 கிரெடிட் கார்டுகள், மொபைல் போன்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.