ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
|உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமதி,
உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஜஸ்ஜித் கவுர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர்.
பின்னர் இது குறித்து ஜஸ்ஜித் கவுர் கூறும்போது, "கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் குளித்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கினர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. நான்காவது உடல் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் 18-32 வயதுக்குட்பட்டவர்கள்.
அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அவர்களின் தகனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.