< Back
தேசிய செய்திகள்
4 நாள் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவுக்கு வருகை
தேசிய செய்திகள்

4 நாள் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவுக்கு வருகை

தினத்தந்தி
|
6 July 2024 2:30 PM GMT

ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.

புவனேஸ்வர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ஒடிசாவில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை கவர்னர் ரகுபர் தாஸ் மற்றும் முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்.

1936-ம் ஆண்டில், ஒடிசா தனி மாநிலம் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்து பங்காற்றிய உத்கலமணி பண்டிட் கோபபந்து தாசின் 96-வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட பகுதியை சேர்ந்த முர்மு, பூரி நகரில் நாளை நடைபெற கூடிய ரத யாத்திரையில் பங்கேற்பது என திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு அடுத்த நாள், உதயகிரி குகை பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து அன்றைய தினம், பிபுதி கனூங்கோ கலை மற்றும் கைவினை கல்லூரி மற்றும் உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் உரையாடுகிறார்.

இதன்பின் வருகிற 8-ந்தேதி, புவனேஸ்வர் அருகே ஹரிதமட கிராமத்தில் பிரம்ம குமாரிகளுக்கான தெய்வீக ஓய்வு மையம் ஒன்றை திறந்து வைக்கிறார். நீடித்த வாழ்க்கைமுறைக்கான பிரசாரம் ஒன்றையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து 9-ந்தேதி புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். அதே நாளில் ஒடிசாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்