அமலாக்கப்பிரிவு இயக்குனருக்கு 3-வது முறை பதவி நீட்டிப்பு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
|அமலாக்கப்பிரிவு இயக்குனர் சஞ்சய் குமார் மிஷ்ராவுக்கு 3-வது முறையாக பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.
புதுடெல்லி
அமலாக்கப்பிரிவு இயக்குனர் சஞ்சய் குமார் மிஷ்ராவுக்கு 3-வது முறையாக பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் நேற்று விசாரித்தபோது மத்திய அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அவை:-
* இயக்குனர் வேலையை செய்வதற்கு அமலாக்கப்பிரிவில் வேறு ஒருவருமே இல்லையா?
* ஒருவர் இப்படி தவிர்க்கவே முடியாத நபராக இருக்க முடியுமா?
* உங்கள் கூற்றுப்படி அமலாக்கப்பிரிவில் திறமையான வேறு நபரே இல்லையா?
* அவர் ஓய்வு பெற்ற பின்னர் அமலாக்கப்பிரிவு இயக்குனர் பதவிக்கு நேரப்போவது என்ன?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நிர்வாக காரணங்களுக்காக அவர் தேவைப்படுகிறார், தவிர்க்கவே முடியாதவர் என்று யாரும் இல்லை, நாங்கள் தனிப்பட்ட நபர்களைப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் செயல்திறனுடன் இணைத்தே பார்க்கிறோம்" என பதில் அளித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்றது.