கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3-வது நாளாக தண்ணீர் திறப்பு
|கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3-வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மண்டியா-
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3-வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
3-வது நாளாக...
தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 19-ந்தேதி முதல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4,674 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கே.ஆர்.எஸ்., கபினி
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 97.02 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,336 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,674 கனஅடியும், கால்வாய்களில் வினாடிக்கு 3,061 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,275.70 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,799 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கபிலா ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கால்வாய்களில் 2,390 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திரிவேணி சங்கமம்
இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4,674 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் டி.நரசிப்புராவில் திரிவேணி சங்கமத்தில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது.