< Back
தேசிய செய்திகள்
கொப்பல் வன்முறை வழக்கில் 38 பேர் கைது
தேசிய செய்திகள்

கொப்பல் வன்முறை வழக்கில் 38 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2022 2:48 PM GMT

கொப்பல் வன்முறை வழக்கில் 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொப்பல்:

மோதல்

கொப்பல் மாவட்டம் கனககிரி தாலுகா ஹீலிஹைதர் கிராமத்தில் வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக இருசமூகத்தினர் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. அப்போது சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த தள்ளுவண்டி கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

இந்த மோதலில் யங்கப்பா(வயது 60), பாஷாவலி(22) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கனககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

38 பேர் கைது

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே வன்முறை நடந்த போது உயிரிழந்த யங்கப்பா, பாஷாவலி ஆகியோரின் உடல்கள் சாலையில் கிடந்து உள்ளன.

யங்கப்பாவின் உடலை மட்டும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால் பாஷாவலியின் உடலை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. பாஷாவலியின் உடல் சாலையில் கிடந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்