இந்தியாவில் நவம்பர் மாதம் 37 லட்சம் கணக்குகள் முடக்கம் - வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்
|அக்டோபர் மாதத்தை விட 60 சதவீதம் அதிகமான இந்திய கணக்குகளை நவம்பர் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றன.
அந்த வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் புகார்களை பெறுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 9 லட்சத்து 90 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த அக்டோபர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்குகளை விட 60 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த அக்டோபரில் மொத்தம் 23.24 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியதாகவும், அதில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் 8.11 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.