இந்தியாவில் 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளன - மத்திய அரசு
|இந்தியாவில் 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது டெல்லி,
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் 329 புலிகள் உயிரிழந்துள்ளன.
அதில் 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும் , 2021-ல் 127 புலிகளும் உயிரிழந்துள்ளன. அவற்றில் 68 புலிகள் இயற்கையான காரணத்தினாலும், 5 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும், 29 புலிகள் வேட்டையாடப்பட்டதாலும், 30 புலிகள் பிற காரணங்களாலும் உயிரிழந்துள்ளன. 197 புலிகளின் இறப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் இருந்து வேட்டையாடுதல் தொடர்பாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ல் 17 வழக்குகளாக இருந்தது 2021-ல் 4 வழக்குகளாக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், புலி தாக்கியதில் 125 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , அதில் மகாராஷ்டிராவில் 61 பேர், உத்தரபிரதேசத்தில் 25 பேர் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 222 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும்,அதில் ஒடிசாவில் 41 யானைகளும், தமிழ்நாட்டில் 34 யானைகளும், அசாமில் 33 யானைகளும் உயிரிழந்துள்ளது. மேலும், ரெயில் விபத்துகளில் 45 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேகாலயாவில் 12 , ஒடிசாவில் 7 யானைகள் உட்பட 29 யானைகள் வேட்டையாடப்பட்டதால் உயிரிழந்துள்ளதாகவும். அசாமில் 9 யானைகள் உட்பட 11 யானைகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.