< Back
தேசிய செய்திகள்
உதய்பூர் படுகொலை;  32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தேசிய செய்திகள்

உதய்பூர் படுகொலை; 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
1 July 2022 6:00 PM IST

கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்தது.

உதய்பூர்,

டி.வி. பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஆவார். அவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகிற தையல்காரர் கன்னையா டெலி (வயது 40) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா டெலி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் அவர் உயிரிழந்து உள்ளார். இதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னையாவின் மகன் அளித்த புகாரில் பேரில், கொலையாளிகள் மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்