< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் தனியார் பள்ளிகளில் 31 மாணவர்களுக்கு கொரோனா
தேசிய செய்திகள்

பெங்களூருவில் தனியார் பள்ளிகளில் 31 மாணவர்களுக்கு கொரோனா

தினத்தந்தி
|
15 Jun 2022 2:23 AM IST

பெங்களூருவில் தனியார் பள்ளிகளில் 31 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் ஆதங்கப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெங்களூரு

பெங்களூருவில் தனியார் பள்ளிகளில் 31 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் ஆதங்கப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும் வலுவாக காலூன்றிய கொரோனா, பல்வேறு உருமாற்றங்களை அடைந்து முதல், 2-வது, 3-வது அலையாக பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் 4-வது அலை தொடங்கி விட்டதோ என அச்சப்படும் வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கா்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 100-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 500-க்கும் மேல் பதிவாகி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் பெங்களூரு நகரில் மட்டும் 400 பேர் அடங்குவர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களையும், சுகாதாரத்துறையையும் அதிர்ச்சி அடைய ெசய்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மாதம் (மே) பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தன.

இந்த நிலையில் பெங்களூருவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

31 மாணவ-மாணவிகள்

பெங்களூரு தாசரஹள்ளி மண்டலத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் 31 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜகோபால் நகரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பில் படிக்கும் 21 மாணவ-மாணவிகளுக்கும், பீனியாவில் உள்ள எம்.இ.எஸ். பப்ளிக் பள்ளியில் 6-ம் வகுப்பில் படிக்கும் 10 மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 2 தனியார் பள்ளி முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அதிர்ச்சி

அத்துடன் 2 தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் நலமுடன் இருப்பதாகவும், யாரும் பயப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தில் மீண்டும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரவ தொடங்கி உள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதங்கப்பட வேண்டியதில்லை

பெங்களூரு தாசரஹள்ளி மண்டலத்தில் உள்ள 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சுகாதாரத்துறைக்கும், எனது கவனத்திற்கும் வந்துள்ளது. கொரோனா பாதித்த மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த மாணவர்களின் பெற்றோரும், பிற குழந்தைகளின் பெற்றோரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பள்ளியின் மீது தனிக்கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிந்து தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வழக்கமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பெற்றோர் இடையே ஆதங்கம் ஏற்படும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

தடுப்பூசி போட வேண்டும்

பெங்களூரு தவிர மாநிலத்தில் மற்ற சில பகுதிகளிலும் பள்ளி மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பற்றி சுகாதாரத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளது. கொரோனா பாதித்த பள்ளிகளில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையை சுகாதாரத்துறையிடம் வழங்கிய பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படு்ம். பெங்களூரு உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

எனவே பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள மக்கள் முன்வர வேண்டும். அதுபோல், 12 வயது மற்றும் 15 வயது மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. அதனால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட வேண்டும். தாசரஹள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்