< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பை போன்று குஜராத்திலும் 300 யூனிட் இலவச மின்சாரம்; கெஜ்ரிவால் பேச்சு
தேசிய செய்திகள்

பஞ்சாப்பை போன்று குஜராத்திலும் 300 யூனிட் இலவச மின்சாரம்; கெஜ்ரிவால் பேச்சு

தினத்தந்தி
|
4 July 2022 9:08 AM GMT

பஞ்சாப்பை போன்று குஜராத்திலும் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதற்கான தீர்வை வழங்குவேன் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



ஆமதாபாத்,



குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பொதுமக்களிடையே இன்று உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால், பஞ்சாப்பில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். குஜராத்திலும் கூட மக்கள் இதனை பெற முடியும். வருகிற ஞாயிற்று கிழமை அடுத்த சந்திப்பின்போது, இதற்கான தீர்வை நான் வழங்குவேன் என அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக பகவந்த் மன் பதவியேற்றார். இதனை தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி, பதவியேற்றதும் கடந்த மார்ச் மாதத்தில், வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் ஒன்றை பகவந்த் மன் அறிமுகப்படுத்தினார்.

ஆம் ஆத்மியின் தேர்தல் அறிவிப்பில் இந்த திட்டம் முக்கிய அம்சம் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு ஜூனில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு பிரசாரத்துக்கு வந்தபோது, நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.

இந்த சூழலில், அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் அளித்த வாக்குறுதியின்படி, இலவச மின்சார வினியோக திட்டம் ஜூலை 1ந்தேதியில் இருந்து பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, குஜராத்தில் நடைபெறும் தேர்தலில் அடுத்து வெற்றி பெற ஆம் ஆத்மி முனைப்புடன் உள்ளது.

அதற்கான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதன்படியே, பஞ்சாப்பின் மக்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது போன்று, குஜராத் மக்களுக்கும் கிடைப்பதற்கான தீர்வை வழங்குவேன் என டெல்லி முதல்-மந்திரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்