சத்தீஷ்கார் தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்; கெஜ்ரிவால் உறுதி
|சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
ராய்ப்பூர்,
நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் இன்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பங்கேற்று பேசினார்.
அவர் கூட்டத்தில் பேசும்போது, சத்தீஷ்காரில் உள்ள அரசு பள்ளிகள் பயங்கர நிலையில் உள்ளன என்றொரு அறிக்கையை நான் படித்தேன். 10 வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் என்றிருந்த நிலையில், பல பள்ளி கூடங்களை அவர்கள் மூடி விட்டனர்.
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமையை கவனியுங்கள். அல்லது டெல்லியில் வசிக்கும் உங்களுடைய உறவினரை கேளுங்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு முதன்முறையாக, கல்வி பிரிவுக்காக அதிகம் பணியாற்றி வரும் அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. உங்களை போன்ற பொதுஜனம் நாங்கள் என்றும் கூறியுள்ளார். சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்.
இதுதவிர, 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன்னும் கலந்து கொண்டார்.