< Back
தேசிய செய்திகள்
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
தேசிய செய்திகள்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

தினத்தந்தி
|
10 Dec 2022 11:46 PM IST

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் வழக்குகளில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி வேதனை தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்

டெல்லியில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்சோ சட்டம்-2012, பாலியல் தாக்குதல், தொல்லை, ஆபாச படங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இந்த சட்டத்தின் கீழ் போக்சோ குற்ற வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.

1 தண்டனை 3 விடுதலை...

இந்த சட்ட வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்படுகிறார் என்றால் 3 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். போக்சோ வழக்குகளில் 56 சதவீத வழக்குகள் தீவிரமானவை. 25.59 சதவீதம், மிக தீவிரமான பாலியல் தாக்குதல் வழக்குகள் ஆகும். இதில் நம்மிடம் ஒரு வழிகாட்டும் நெறிமுறை உள்ளது. அதில் இன்னும் வலுவான தலையிடல் தேவைப்படுகிறது.

509 நாட்கள்....

ஒரு போக்சோ வழக்கில் தீர்ப்பு வருவதற்கு சராசரியாக 509 நாட்கள் ஆகின்றன.

இந்த வழக்குகளை பொறுத்தமட்டில், எங்கள் அமைச்சகத்தால் செய்து தரக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன தேவை என்பதை நீதிபதிகளும், சம்மந்தப்பட்ட பிறரும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் நமது குழந்தைகள்மீதான இத்தகைய தாக்குதல் வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதில் நீதித்துறையுடன் நாங்கள் எங்கள் பங்களிப்பை உறுதி செய்ய முடியும். நமது முக்கிய செயல் திட்டம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதுதான்.

ஆனால் நீதி தாமதித்தால், மறுக்கப்பட்டால் அதைச்செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலில், இடைவெளிகளை சரி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். தங்கள் வாழ்க்கை களவாடப்பட்டுவிட்டதாக நினைக்கிற இளம் மனங்களை நாம் நம்பிக்கையைத் தந்து மறு கட்டமைப்பு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்