நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; பின்னணி என்ன?
|நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியாவில், அதற்கு ஏற்ற வகையில் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியது இருக்கிறது.மருத்துவ படிப்பு, இளைய தலைமுறையினரின் கனவு படிப்பாக இருக்கிறது. அதிகமான டாக்டர்களை உருவாக்க ஏற்ற விதத்தில் 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
2014-ம் ஆண்டில் நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண்பவார் வெளியிட்டவை ஆகும்.
மருத்துவ கல்லூரிகள் பெருகுகிறபோது எம்.பி.பி.எஸ். இடங்களும் அதிகரிக்கின்றன.2014-ம் ஆண்டு மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 51 ஆயிரத்து 348 ஆகும். தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆகும். முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் 107 சதவீதம் அதிகரித்து 31 ஆயிரத்து 185-ல் இருந்து 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் நாடெங்கும் 2 மாத காலத்தில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆகிய 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டதுதான் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, "அங்கீகாரம் ரத்தாகி உள்ள மருத்துவ கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்றவில்லை. ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இல்லாதது, போதுமான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கொண்டவை ஆகும். இந்த குறைகள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழ்நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஏறத்தாழ 100 மருத்துவ கல்லூரிகள் மீது இதே போன்ற அங்கீகார ரத்து நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் கூறுகின்றன.இது மாணவ சமூகத்தினர் மத்தியிலும், மருத்துவ கல்வி துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுவதால் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் வேளையில் இதுபற்றிய நிபுணர்களின் கருத்து வருமாறு:-
தேசிய மருத்துவ ஆணையம் பெரும்பாலும் ஆதார் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவைத்தான் கவனத்தில் கொள்கிறது.
டாக்டர்கள் பணி நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. அவர்கள் நெருக்கடியான நேரத்திலும், இரவு நேரத்திலும் பணி செய்கின்றனர். எனவேதான் பணி நேரம் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் காட்டுகிற தீவிரம் இந்த பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக நடைமுறையில் சாத்தியம் இல்லை. இதில் தேசிய மருத்துவ ஆணையம் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
குறைபாடுகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையில்தான் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்கிறது. அதே நேரத்தில் இத்தகைய கல்லூரிகளில் மாணவர்கள் பதிவை தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்கிறது. இது முரணானது. இதெல்லாம் உலக அரங்கில் நாட்டின் மதிப்பை குலைப்பதாகும். ஏனென்றால் இந்தியாதான் உலக அளவில் டாக்டர்களை பெருமளவில் வழங்குகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் வெளி உலகுக்கு தெரிய வருகிறபோது இந்திய டாக்டர்கள் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பார்கள்.
இவ்வாறு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.