தவறான தகவல்களை வெளியிட்ட 3 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
|தவறான தகவல்களை வெளியிட்டதால் 3 யூ-டியூப் சேனல்களை முடக்க மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கடந்த ஓராண்டில் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட யூ-டியூப் சேனல்களை முடக்கியது. இந்நிலையில் தவறான தகவல்களை வெளியிட்ட 3 யூ-டியூப் சேனல்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் நியூஸ் ஹெட்லைன்ஸ், ஆஜ் தக் லைவ் மற்றும் சர்காரி அப்டேட்ஸ் ஆகிய 3 யூ-டியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 யூ-டியூப் சேனல்களுக்கும் மொத்தம் 33 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனல்கள் உண்மைத் தன்மை இல்லாத தகவல்களை பரப்பியதாகவும், குறிப்பாக சுப்ரீம்கோர்ட்டு, அரசு திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.