அரசு அதிகாரிக்கு 3½ ஆண்டுகள் சிறை; ரூ.50 லட்சம் அபராதம்; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
|வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மங்களூரு;
அரசு அதிகாரி
கா்நாடக மாநில உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் ரத்னாகர் நாயக். இவர் பணியாற்றிய போது தன் பெயரிலும் என்னுடைய குடும்பத்தினர் பெயரிலும் பல்வேறு இடங்களில் வருமானத்திற்கு அதிகபடியான ெசாத்துகள் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக ஊழல் தடுப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிரடி கைது
அந்த சோதனையில் அவர் கணக்கில் காட்டாமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்ந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை மங்களூரு முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
3½ ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் இந்த வழக்கு மங்களூரு முதலாவது குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஜகதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதி, குற்றம்சாட்டப்பட்ட ரத்னாகர் நாயக் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஒருவேளை அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளார்.