< Back
தேசிய செய்திகள்
8 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு
தேசிய செய்திகள்

8 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு

தினத்தந்தி
|
2 Jan 2024 12:49 PM IST

மீட்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தை சேர்ந்த எஞ்சல் சக்ரா என்ற 3 வயது குழந்தை நேற்று பிற்பகல் 1 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்புறம் உள்ள 30 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 8 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு சுயநினைவற்ற நிலையில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை ஜாம் கம்பாலியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மூச்சுத்திணறல்தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்றும், ஆனால் சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்