< Back
தேசிய செய்திகள்
விளைநிலங்களில் புகுந்து 3 காட்டு யானைகள் அட்டகாசம்
தேசிய செய்திகள்

விளைநிலங்களில் புகுந்து 3 காட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
2 July 2023 3:14 AM IST

எலந்தூர் தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து 3 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளேகால்:-

காட்டு யானைகள் அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி முருதிபாளையா உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில், பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி முருதிபாளையா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பீதி அடைந்துள்ள மக்கள், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வனத்துறையினர் காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டினாலும் அவை வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. மேலும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பல லட்சம் ரூபாய் நஷ்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறி முருதிபாளையாவை சேர்ந்த ராஜீவ், சுப்பாராவ் உள்ளிட்ட விவசாயிகளின் விளைநிலங்களில் புகுந்தன. பின்னர் அந்த யானைகள், வாழை, தென்னை மரங்களை சாய்த்து, செடிகளை பிடுங்கி எறிந்தும், தின்றும், தண்ணீர் குழாய்களை உடைத்தும் நாசம் செய்தன. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கோரிக்கை

அப்போது அந்தப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்