உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளர் சிவசேனாவில் இணைந்ததால் பரபரப்பு
|பல எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய போதும் ரவீந்திர வாய்கர் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியில் நீடித்து வந்தார்.
மும்பை,
மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கர். சிவசேனா 2 ஆக உடைந்த போது உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக இருந்தவர். பல எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய போதும் ரவீந்திர வாய்கர் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியில் நீடித்து வந்தார். கடந்த சனிக்கிழமை கூட ஜோகேஸ்வரில் உள்ள ரவீந்திர வாய்கரின் வீட்டுக்கு உத்தவ் தாக்கரே சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று ரவீந்திர வாய்கர் மும்பையில் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
ரவீந்திர வாய்கர் முறைகேடாக மும்பை மாநகராட்சி நிலத்தை பெற்று ஓட்டல் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மும்பை போலீசார் ரவீந்திர வாய்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரவீந்திர வாய்கர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தநிலையில் தான் அவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.