< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரி மாநிலத்தில் 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் - மத்திய மந்திரி எல்.முருகன்
தேசிய செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் - மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
10 July 2022 2:07 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடைபெறவில்லை என்றும், கடந்த 8 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

கலந்துரையாடல்

புதுச்சேரியில் மத்திய மந்திரி எல்.முருகன் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று கிரீன் பேலஸ் ஓட்டலில் பல்வேறு வகையான தொழில்முறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாரக மந்திரம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசானது எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை, நல்ல அரசாங்கம், ஏழைகளின் நலன் என்பதுதான் இந்த ஆட்சியின் தாரக மந்திரம்.

இப்போது நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. வருகிற 2047-ல் 100-வது சுதந்திர ஆண்டில் இந்தியா வளர்ச்சிமிக்க நாடாக மாறி அனைவருக்கும் வீடு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்திருக்கவேண்டும்.

ரூ.3 ஆயிரம் கோடி திட்டம்

பிரதமரின் கூற்றுப்படி 'பெஸ்ட்' புதுச்சேரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதுவை ரெயில் நிலையம் ரூ.90 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. 2 ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.

ஊரக மேம்பாடு கட்டமைப்புக்கு ரூ.50 கோடி, ஜிப்மருக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 11 ஆயிரம் பேருக்கு பிரதமரின் ரூ.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,850 கோடியில் தீட்டப்பட்டு அதற்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கி பணிகள் நடக்கிறது.

இரட்டை ஆட்சி

உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வந்தபோது ரூ.600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு விரைவில் ரூ.80 கோடி வழங்கப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் 1,400 பேர் பிரதமரின் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனர்.

புதுச்சேரியின் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சியாக கருதி பணிகளை மேற்கொண்டுள்ளோம். புதுவையில் இரட்டை ஆட்சி நடைபெறவில்லை. மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்