திருட்டு வழக்குகளில் 3 வாலிபர்கள் சிக்கினர்; ரூ.8¼ லட்சம் மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
|சாகரில், திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.8¼ லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.
சிவமொக்கா;
போலீசார் ரோந்து
சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் சாகர் டவுனில் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் சுற்றித்திரிந்தனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அதில் அவர்கள் சிவமொக்கா நகரை சேர்ந்த ஷமீர்(வயது 23), முகமது காத்திரி(19) மற்றும் ஜூனைத் கான்(20) ஆகியோர் என்பதும், இவர்கள் சிவமொக்கா, தாவணகெரே, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் நிற்கும் மோட்டார் சைக்கிளை திருடி விற்று வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் சாகர், சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.8.20 லட்சம் ஆகும். கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.