உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் பலி
|உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இந்து மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரையாக வந்து வழிபாடு நடத்துவர்.
அந்த வகையில் நடப்பு ஆண்டு யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத்தில் உள்ள கோவிலுக்கு யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கேதார்நாத் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் கவுரிகண்ட் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக கேதார்நாத் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 8 பேரை மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட மீட்புக்குழுவினர் பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரில் 2 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.