திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்குதல் - 2 பேர் கைது
|இடுக்கி அருகே திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
பாலக்காடு:
இடுக்கி மாவட்டம் கைலாசம் பகுதியை சேர்ந்தவர் அகில் (24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (28), முருகேசன் (23). கடந்த மாதம் அகில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு நண்பர்களான முருகேசன், விஷ்ணு ஆகியோரை அழைக்கவில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் கோபத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் அகில் வீட்டுக்கு முருகேசன், விஷ்ணு ஆகியோர் வந்தனர். திருமணத்திற்கு ஏன் அழைக்கவில்லை என்று கூறி அகிலை தாக்கி உள்ளனர். இதை தடுக்க வந்த அகிலின் தாய், தந்தையையும் தாக்கினர். மேலும் வீட்டில் இருந்து அலங்கார பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அகில் மற்றும் அவரது தாய், தந்தையை அக்கம்பக்கத்தினர் நெடுங்கண்டம் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இடும்பன்சோலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் கனி மற்றும் போலீசார், முருகேசன், விஷ்ணு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.