< Back
தேசிய செய்திகள்
மின்னல் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் சாவு; வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம்
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் சாவு; வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம்

தினத்தந்தி
|
14 Oct 2022 3:08 AM IST

கலபுரகி, பாகல்கோட்டையில் பலத்த மழைக்கு மின்னல் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். கதக்கில் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:

தந்தை-மகன் சாவு

கர்நாடகத்தில் பெலகாவி, கலபுரகி, பாகல்கோட்டை, யாதகிரி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுபோல், நேற்று முன்தினமும் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா பல்லங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் துலஜா நாயக் (வயது 44). இவரது மகன் அவின் (16).

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது பெய்த மழையின் போது தந்தை, மகனை மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்து விட்டார்கள். இதுபோல், பாகல்கோட்டை மாவட்டம் வர்ஜகல் கிராமத்தில் பெய்த மழைக்கு மின்னல் தாக்கியதில் விவசாயி கிருஷ்ணப்பா (30) என்பவர் உயிர் இழந்தார்.

வீடு இடிந்து விழுந்தது

கதக் மாவட்டம் கந்தலாநகரை சேர்ந்தவர் சுசுமா (61). நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். அப்போது சுசுமாவின் வீட்டுசுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் சுசுமா பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினர் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலத்த மழை காரணமாக வீடுஇடிந்தது தெரியவந்தது.

இதற்கிடையில், பெலகாவியில் பெய்த மழைக்கு சானிகுப்பா கிராமத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே கிராம மக்கள் வாலிபரை மீட்டனர். ஆனால் மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாகல்கோட்டையில் பெய்த பலத்தமழைக்கு பீலகி, பாதாமியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்கு வசித்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்