< Back
தேசிய செய்திகள்
ஒரே குடும்பத்தில் 3 பேர் கழுத்தை அறுத்துக் கொலை
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 3 பேர் கழுத்தை அறுத்துக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
9 July 2024 11:23 AM IST

நள்ளிரவில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்துள்ளனர்.

லக்னோ,

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், தூங்கிக்கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் நந்த்கஞ்ச் பகுதி மவுஜா கிராமத்தை சேர்ந்தவர் முன்ஷி பிந்த் (வயது 45). அவருடைய மனைவி தேவந்தி (40). இவர்களது மகன் கள் ராமஷிஷ் (20), ஆசிஷ்.

நேற்று முன்தினம் இரவு, முன்ஷி பிந்தும், தேவந்தியும் வீ்ட்டுக்கு வெளியே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். ராமஷிஷ் மட்டும் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். இளைய மகன் ஆசிஷ் வெளியே சென்றிருந்தார். நள்ளிரவில் கூரிய ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த முன்ஷி பிந்த், தேவந்தி ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பிறகு வீட்டுக்குள் சென்று ராமஷிசையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பினர்.

நள்ளிரவில் வீடு திரும்பிய இளைய மகன் ஆசிஷ், தன் தந்தையும், தாயும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அண்ணனை எழுப்பலாம் என்று வீட்டுக்குள் சென்றபோது, அண்ணனும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்கூட்டியே திட்டமிட்ட கொலைகள் போல் தெரிவதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்வீர் சிங் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்