< Back
தேசிய செய்திகள்
சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 3 பேர் பலி
தேசிய செய்திகள்

சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 3 பேர் பலி

தினத்தந்தி
|
1 Jan 2023 9:03 PM IST

சங்கராந்தி பண்டிகையொயொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சந்திரபாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

அமராவதி,

ஆந்திரபிரதேசத்தில் வரும் 14-ம் தேதி சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். பின்னர், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

நலத்திட்டங்களை பெறவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின் சந்திரபாபு நாயுடு அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய பின் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் பலருக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இதேபோல் கடந்த புதன்கிழமை நல்லூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்ற நிலையில் தற்போது 2-வதாக சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்