< Back
தேசிய செய்திகள்
புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
தேசிய செய்திகள்

புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
23 Dec 2022 2:35 AM IST

ஹாவேரி அருகே, காதல் விவகாரத்தில் புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

ஹாவேரி:

மகளை அழைத்து வரும்படி தொல்லை

ஹாவேரி (மாவட்டம்) தாலுகா அகாடி கிராமத்தை சேர்ந்தவர் விருபாக்ஷப்பா. இவரது மனைவி பாரதி (வயது 40). இந்த தம்பதியின் மகன்கள் கிரண் (22), அருண் (21). கிரணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுஜன்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருந்தது. அருணும், அகாடி கிராமத்தில் வசித்து வரும் புட்டண்ணஷெட்டி என்பவரின் மகளும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு புட்டண்ணஷெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு அருணும், அவரது காதலியும் வீட்டில் இருந்து வெளியேறி கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி அறிந்ததும் புட்டண்ணஷெட்டியும் அவரது உறவினர்களும் சேர்ந்து தங்களது மகளை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூறி பாரதியின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாரதியும், அவரது குடும்பத்தினரும் மனம் உடைந்து காணப்பட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் வைத்து பாரதி, கிரண், சவுஜன்யா ஆகிய 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹாவேரி புறநகர் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஹாவேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் புட்டண்ணஷெட்டியும், அவரது குடும்பத்தினரும் கொடுத்த தொல்லையால் தான் பாரதி, கிரண், சவுஜன்யா ஆகிய 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ஹாவேரி புறநகர் போலீஸ் நிலையத்தில் விருபாக்ஷப்பா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாவேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்