< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்கில் 3 பேர் கைது; ரூ.11¼ லட்சம் வாகனங்கள் மீட்பு
தேசிய செய்திகள்

திருட்டு வழக்கில் 3 பேர் கைது; ரூ.11¼ லட்சம் வாகனங்கள் மீட்பு

தினத்தந்தி
|
27 July 2022 8:01 PM IST

சிகாரிப்புராவில், திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.11¼ லட்சம் மதிப்பிலான வாகனங்களை போலீசார் மீட்டனர்.

சிவமொக்கா;

திருட்டு வழக்கில்...

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கடந்த மாதம் 28-ந்தேதி தன்னுடைய மோட்டாா் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருந்தது.

இதுகுறித்து அவர் சிராளகொப்பா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

16 இருசக்கர வாகனங்கள்

விசாரணையில், அவர்கள் சிகாரிப்புரா தாலுகா சண்டா கிராமத்தைச் சேர்ந்த சையத் இஸ்ரார்(வயது 26), புனதேஹள்ளி பகுதியை சேர்ந்த ராகேஷ்(24) மற்றும் சிகாரிப்புரா டவுன் பகுதியை சேர்ந்த கோபாலா(28) என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் வைத்திருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் 5 சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்