3 பூட்டுகள்... வாளியிலே இயற்கை உபாதை..: 3-வது மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த கணவர்..
|12 ஆண்டுகளாக அடைபட்டு கிடந்த ஷீலாவை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஹரிகே கிராமத்தை சேர்ந்தவர் சுனாலயா. தொழிலாளி. இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுனாலயாவுக்கு இது 3-வது திருமணமாகும். அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்திருந்தார்.
சுனாலயாவின் கொடுமை தாங்காமல் அவர்கள் 2 பேரும் சுனாலயாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் சுனாலயா ஷீலாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் 2 மனைவிகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால், 3-வது மனைவியான ஷீலாவும் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்று சுனாலயா பயத்தில் இருந்துள்ளார். மேலும் சந்தேக பேய் அவரை பிடித்துள்ளது. இதனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சுனாலயா, தனது மனைவியை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாக தெரிகிறது.
கதவுக்கு 3 பூட்டுகள் போட்டும், ஜன்னல்களையும் அடைத்துள்ளார். இதனால் ஷீலா வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்துள்ளார். அத்துடன் அந்த அறையில் கழிவறையும் இல்லை என தெரிகிறது. இதன்காரணமாக அவர் வாளியில் இயற்கை உபாதை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் 12 ஆண்டுகள் வீட்டு சிறையில் ஷீலா சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளார். கணவர் சுனாலயாவின் சந்தேக பேயால், ஷீலா 12 ஆண்டுகளாக சொல்லொணாத் துயரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஷீலா வீட்டு சிறையில் அடைபட்டு கிடப்பது பற்றி மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் சுனாலயாவின் முதல் 2 மனைவிகள், எச்.டி.கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சுனாலயாவின் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்கள், வீட்டின் கதவை உடைத்து, 12 ஆண்டுகளாக அடைபட்டு கிடந்த ஷீலாவை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார், மனிதாபிமானமற்ற கொடூர செயலில் ஈடுபட்ட ஷீலாவின் கணவர் சுனாலயாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரின் சந்தேக பேயால் மனைவி 12 ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.