ரூ.3½ லட்சம் தங்கச்சங்கிலி கொள்ளை
|பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் காரை வழிமறித்து போலீஸ் எனக்கூறி டிரைவரை தாக்கி ரூ.3½ லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மைசூரு:-
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே விரைவுச்சாலை அமைந்துள்ளது. இந்த விரைவுச்சாலையில் அடிக்கடி வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கார்களில் செல்பவர்களை வழிமறித்து மர்மநபர்கள் தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் ஆய்வு செய்தார். மேலும் வாகன ஓட்டிகளிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் ஆய்வு செய்த அன்று இரவே விரைவுச்சாலையில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
தங்கச்சங்கிலி கொள்ளை
குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்தவர் முத்தப்பா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து மடிகேரி நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் நள்ளிரவு 2 மணி அளவில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே சென்றபோது, மர்மநபர்கள் அவரது காரை வழிமறித்தனர்.
அப்போது மர்மநபர்கள் தங்களை போலீஸ் என கூறி, முத்தப்பாவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் முத்தப்பாவை கத்திமுனையில் மிரட்டியும், தாக்கியும் அவர் அணிந்திருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான 65 கிராம் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அந்த சமயத்தில் அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் நடந்த விவரங்களை முத்தப்பா கூறினார். பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசில் முத்தப்பா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.