வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஆடம்பர செலவு:சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
|சண்டிகரைச் சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 2015-ம் ஆண்டு லட்சக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து பிரான்ஸ் சென்று வந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சண்டிகர்,
சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகராக உள்ளது. சுவிஸ் - பிரெஞ்ச் கட்டடக்கலை நிபுணரான லீ கார்பூசியர் என்பவரால் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டது. சண்டிகரில் உள்ள சட்டசபை, கோர்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்டடங்களை அவர் தான் வடிவமைத்தார்.
இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லீ கார்பூசியர் அறக்கட்டளை, 2015-ல் அவரது 50-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பங்கேற்க, சண்டிகர் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பின் பேரில், நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சண்டிகர் நிர்வாகம் பரிந்துரைத்தது. அதில், மூன்று அதிகாரிகளுக்கு உள்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி, சண்டிகர் நிர்வாகியின் அப்போதைய ஆலோசகர் விஜய் தேவ், அப்போதைய உள்துறை செயலர் அனுராக் அகர்வால், அப்போதைய அரசு பணியாளர் நலத்துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோர் பிரான்ஸ் சென்றனர். அப்போது, இவர்கள் மூன்று பேரும், மாறி மாறி மற்றவர்களுக்கான அனுமதி ஆணையில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
சண்டிகரின் தலைமை கட்டடக்கலை நிபுணருக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாறாக மக்கள் பணத்தில் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சென்று வந்துள்ளதாகவும், மத்திய கணக்கு தணிக்கை இயக்குனரகம் தற்போது தெரிவித்துள்ளது. இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் சண்டிகர் நிர்வாகம் செய்துள்ளது.
ஒரு நாள் பயணத்தை ஏழு நாட்கள் நீடித்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இன்றி விமானத்தில் பிசினஸ் கிளாஸ் பயணம், நட்சத்திர விடுதியில் தங்கியது என தனது வெளிநாட்டு பயணத்தில் அதிகாரிகள் ஆடம்பர செலவு செய்ததன் மூலம் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இது அனுமதிக்கப்பட்ட தொகையை விட 40 சதவீதம் அதிகம் ஆகும் சர்ச்சையில் சிக்கியுள்ள இரண்டு அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.
ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டார். தணிக்கை துறை அறிக்கையில் கிடைத்துள்ள தகவல் பற்றி சண்டிகர் நிர்வாகம் கூறுகையில், இந்த மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.