பஞ்சாப் பல்கலைக்கழக மாணவிகளின் வீடியோக்கள் கசிந்த விவகாரம்: போராட்டம் வாபஸ்! 6 நாட்கள் வகுப்புகளுக்கு விடுமுறை!
|தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 24 வரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. மாணவிகள் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில கல்வி மந்திரி ஹர்ஜோத்சிங் பைன்ஸ் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, திங்கள்கிழமை(இன்று) அதிகாலை 1.30 மணியளவில் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதி வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் மற்றும் விடுதி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை, பல்கலைக்கழக மாணவிகளின் ஆட்சேபகரமான வீடியோக்களை தயாரித்து பரப்பியதாக மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு மாணவி மற்றும் அவரது 23 வயது ஆண் நண்பன்( இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்) மற்றும் அவரது கூட்டாளி 31 வயது நண்பர் ஆகிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.