< Back
தேசிய செய்திகள்
கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி சாவு
தேசிய செய்திகள்

கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி சாவு

தினத்தந்தி
|
27 Dec 2022 3:17 AM IST

சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 கூலி தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சாம்ராஜ்நகர்:

சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 கூலி தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கல்குவாரியில் விபத்து

சாம்ராஜ்நகர் தாலுகா பிசல்வாடி பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியின் உரிமையாளர் ரேணுகா தேவி. இந்த கல்குவாரியில் 12 கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கூலி தொழிலாளிகள் 3 பேர் குவாரிக்கு வெடி வைப்பதற்காக எந்திரம் கொண்டு துளையிட்டு கொண்டிருந்தனர். இதில் ஒருவர் பாறை மீறி ஏறி, துளையிட்டு கொண்டிருந்தார். மீதமுள்ள 2 பேர் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். பாறைகளில் துளையிட்டு கொண்டிருந்தபோது, லேசான அதிர்வு ஏற்பட்டது.

இந்த அதிர்வை கூலி தொழிலாளிகள் கவனிக்காமல் வேலை பார்த்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதிர்வு அதிகமானதில், குவாரியின் மேல் பகுதியில் குவித்து வைத்திருந்த பாறாங்கல், கீழே சரிந்து விழுந்தது. இதில் கீழே வேலை பார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகள் 3 பேர் மீதும் பாறாங்கல் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி தவித்த 3 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடன் இருந்த கூலி தொழிலாளிகள் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

3 பேர் சாவு

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாறாங்கற்களை அகற்றினர். அப்போது அதில் 2 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். ஒரு தொழிலாளி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

காயமடைந்தவரை போலீசார் மீட்டு சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்தவர்கள் காசலவாடியை அடுத்த மோளே கிராமத்தை சேர்ந்த குமார்(28), சிவராஜ்(35), சித்தராஜ்(27) என்று தெரியவந்துள்ளது.

குவாரியில் கூலி தொழிலாளிகளுக்கு முறையான பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 200 அடி ஆழம் மட்டுமே தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த குவாரி 250 அடிக்கும் அதிகமான தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சுரங்கத்துறை மற்றும் புவியியல் துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறுப்படுகிறது

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை சுரங்க மட்டும் புவியியல் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக குவாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா மாட்டள்ளியில் கடந்த மார்ச் மாதம் இதேபோல கல்குவாரி ஒன்றில் பாறாங்கல் சரிந்து விழுந்து 3 கூலி தொழிலாளிகளில் இறந்தனர்.

இதையடுத்து சுரங்கத்துறை புவியியல் துறை அனைத்து குவாரிகளுக்கு தடையில்லா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்தனர். இதனால் பல குவாரிகள் தடையில்லா சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்தனர். இந்த கல்குவாரியும் தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுத்திருந்தது. இந்நிலையில் விபத்து நடந்த பின்னர் குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்